சிலமாதங்களுக்கு முன்பு அதிரையில் தவ்ஹீது ஜமாத் சார்பில் சேதுசாலையில் (காதிர் முஹைதீன் கல்லூரி வளாகத்திலுள்ள பள்ளிக்கு இணையாக) ஒரு பள்ளிவாசல் கட்ட உதவுக்கோரிய மின்மடல் குறித்து என் கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.இதைக்கண்டு சிலர் வெகுண்டெழுந்ததை பலரும் அறிவீர்கள்.
சென்ற மாதம் விடுமுறையில் ஒருமாத காலம் ஊரில் இருந்தபோது காலேஜ் ரோட்டிலுள்ள தவ்ஹீது ஜமாத் பள்ளியில் தொழுவதற்காகச் சென்றேன்.இகாமத் முடிந்து இமாமைப் பின் தொடர்ந்து தொழுதேன்.மஃரிப் நேரம் என்பதால் ஜமாத்தில் என்னுடன் 10 பேர் தொழுது இருப்பார்கள் என்று நினைக்கிறேன். தொழுது கொண்டிருக்கும்போது இரண்டாம் ரகாத்தில் என்னருகே தொழுதவர் என்னைக் கவனிப்பதைப் போன்று உணர்ந்ததால் தொழுது கொண்டிருந்தபோதே நானும் அவரை கடைக்கண்ணால் பார்த்தேன்.
அத்தஹியாத்தில் நான் விரலை ஆட்டாமல்/அசைக்காமல் உட்கார்ந்திருந்ததை அவர் கவனிப்பதைக் கண்டேன்! இப்படியே மூன்றாம் ரக்காத்தையும் முடித்துவிட்டு இரண்டு ரகாத் சுன்னத் தொழுதேன். அப்போதும் விரலை ஆட்டவில்லை! தொழுகையை முடித்துவிட்டு அமர்ந்திருந்த மற்ற சிலரும் என் விரலைக் கவனிப்பதைப் பார்த்தேன்.
இதை எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் ஒருகாலத்தில் தொழுது கொண்டிருக்கும்போது புதிதாக தவ்ஹீது ஜமாத்தில் இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரலசைத்தல், நெஞ்சில் தக்பீர் கட்டிக் கொள்ளுதல் முக்கியமாக தொப்பியின்றி தொழுதல் போன்றவை பிறரின் கவனத்தை ஈர்க்கும். இதனால் சிலநேரம் பிரச்சினைகளும் எழுந்துள்ளன. அந்தநிலை வேறொரு கோணத்தில் இன்றும் இருக்கிறது.
வழக்கமாக ஊரிலிருக்கும்போது எங்கள் வீட்டருகேயுள்ள புதுப்பள்ளியிலோ அல்லது மணைவி வீட்டருகேயுள்ள செக்கடிபள்ளி அல்லது சித்தீக் பள்ளியிலோ வசதிப்படி தொழுவது வழக்கம். அங்கெல்லாம் எப்படி தொழுதேனோ அப்படித்தான் தவ்ஹீது பள்ளியிலும் தொழுதேன்.காலேஜ் பள்ளியிலும், சற்று தூரத்திலுள்ள பிலால் பள்ளியிலும்கூட இப்படித்தான் தொழுது வந்தேன். மேற்சொன்ன அனைத்து பள்ளிகளிலும் என்னை யாரும் கவனிப்பதாக உணராத நான் தவ்ஹீது பள்ளியில் மட்டும் ஏன் அவ்வாறு கருதினேன் என்ற கேள்விகள் தொடர்கின்றன.
சொல்லவந்த விசயத்தை விட்டுவிட்டு சொந்தக்கதையைப் பேசிக்கொண்டிருக்கிறேன். காலேஜ் பள்ளிக்கும் தவ்ஹீது ஜமாத் பள்ளிக்கும் சுமார் 20-30 மீட்டர் மட்டுமே இடைவெளி. இரண்டிலுமே ஏகஇறைவனான அல்லாஹ்வை அவன் தூதர் நபி ஸல் அவர்கள் சொல்லித் தந்த வழிகாட்டல்படியே தொழுது வருகிறோம். காலேஜ் பள்ளியில் சாதாரணமாக இரண்டு ஸஃப்கூட நிரம்பாது. (தற்போது எப்படி என்று தெரியவில்லை) அதிலும் பெரும்பாலும் மதரஸா மற்றும் விடுதி மாணவர்களே இருப்பார்கள். மீதம் 75% சதவீதம் காலியாக இருக்கும்.
தவ்ஹீது ஜமாத் பள்ளியில் நான் சென்ற மஃரிப் தொழுகைக்கு இமாமுடன் சேர்த்து 10 பேர் மட்டுமே இருந்தார்கள். தொழுவதற்கு போதிய இடவசதியுள்ள காலேஜ் பள்ளியைத் தவிர்த்து தவ்ஹீது ஜமாத் 20 மீட்டர் தூரத்தில் தனிப்பள்ளி கட்டவேண்டிய அவசியம் என்ன? என்று விபரம் அறிந்தவர்கள் விளக்கினால் தேவலாம்.
இன்னொரு பக்கம் பட்டுக்கோட்டை ரோட்டில் பள்ளிகொண்டான் லாரல் பள்ளியில் சுமார் 200-300 முஸ்லிம் மாணவர்கள் படிக்கிறார்கள். அதிரையிலிருந்து 4-5 பஸ்களில் மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள். காலை 8 மணிமுதல் மாலை 5-6 மணி வரைக்கும் பள்ளிவளாகத்தில் இருக்க நேரிடுகிறது.
ளுஹர்,அஸர் குளிர்காலத்தில் மஃரிப் தொழுகைகளையும், வெள்ளிக்கிழமையில் ஜும்ஆவும் தொழமுடியாமல் இருப்பதை அறிந்த நமதூர் நலன்விரும்பிகள் அதிரை பைத்துல்மால் சார்பில் அருகிலுள்ள தோப்பில் சிறுகூரைக் கொட்டகையில் மேற்கண்ட தொழுகைகளை நிறைவேற்றி வந்தனர். அப்பள்ளிக்குச் சென்று தொழுகை வைக்கும் பேஷ் இமாமுக்கு அதிரை பைத்துல்மால் சார்பில் போக்குவரத்து மற்றும் ஊதியம் வழங்கப்பட்டது.
என்ன காரணத்தினாலோ தற்போது அந்தக்கூரைக்கொட்டகையில் தொழுகை நடைபெறுவது இல்லை. மாணவர்கள் தொழ இடமளித்த தோப்பு உரிமையாரும் ஏதோ காரணத்தினால் இனி இடம் கொடுக்க முடியாத சூழலிலுள்ளதாகத் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது சுமார் 200-300 மாணவர்களுக்கு தொழமுடியாத நிலை உள்ளது.
பள்ளி நிர்வாகத்திடம் சில பெற்றோர்கள் விசாரித்த வகையில் பள்ளி வளாகத்தில் பிரேயர் ஹால் ஏற்படுத்தும் திட்டம் இருப்பதாகச் சொல்லப்பட்டதாகச் சிலர் தெரிவித்தனர். சமீபத்தில் பள்ளிக்குச் சென்றிருந்தத்போது அத்தகைய திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தன் மகனைச்சேர்க்க வந்தவர் தெரிவித்தார்.இதுநாள்வரை என்னநிலை என்று தெரியவில்லை.
மேலும் விசாரித்த வகையில் பள்ளிகொண்டான் பஞ்சாயத்தில் அப்பகுதியில் பள்ளிவாசல் கட்டக்கூடாது என்று தீர்மானம் போட்டிருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு மதசார்பற்ற நம்நாட்டில் முஸ்லிம்களின் நிலை,அதுவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள அவர்களின் விவசாய நிலங்கள், சொத்துக்கள் நிறைந்துள்ள பகுதியில் முஸ்லிம்களின் நிலையை எண்ணி வேதனைப் படாமலிருக்கு முடியவில்லை.
ஒரு இந்துக் கோவிலைக் கட்ட வேண்டுமென்றால் யாருடைய அனுமதியும் தேவையில்லை. அவர்களின் வழிபாட்டு முறையும் அவ்வாறுள்ளதால் நினைத்த இடத்தில் இரும்பு வேலையும் உண்டியலையும் வைத்து மாலையைத் தொங்கவிட்டால்போதும்! ஆனால் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெறவேண்டும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.
பொது இடத்தில் வழிபாட்டுத்தளம் அமைக்க இந்தக் அனுமதி இருப்பதில் நியாயமுள்ளது. தனியார் நிலத்திலும் அவர்கள் விரும்பிய வழிபாட்டுத்தளத்தை அமைக்க கட்டுப்பாடு விதிக்க கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு யார் அதிகாரம் வழங்கினார்கள் என்று தெரியவில்லை. இந்திய சட்டப்படி வழிபாட்டு உரிமையை தடுப்பது குற்றம் என்றெல்லாம் சொல்வார்கள். இதுகுறித்து அறிந்தவர்கள் அறியத்தரலாம்.
சொல்லவந்த விசயம் என்னவென்றால் தொழ ஆளில்லாத இடத்தில் ஏற்கனவே பள்ளிவாசல் இருக்கும்போது இன்னொரு பள்ளியைக் கட்டிக்கொண்டு நிதி உதவி கோருவதைவிட, தொழ வசதியில்லாத லாரல் பள்ளியருகே நமதூர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பள்ளிவாசல் கட்டினால், 200-300 மாணவர்கள் மூன்று வேலை தொழுகையைக் கடைபிடித்த நன்மை கிடைக்குமே.
ஆள்பலம்,அரசியல் செல்வாக்கு கொண்ட பிற இயக்கங்களும்கூட இதைச்செய்ய முன் வரலாம்.அப்படியொரு திட்டத்தில் எவரும் ஈடுபட்டிருந்தால் இன்ஷா அல்லாஹ் அதிரை எக்ஸ்ப்ரஸ் மூலம் அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்ட வாசகர்களும் உதவலாம்.
எதைச் சொன்னாலும் குறையாக அல்லது வன்மமாக எடுத்துக் கொள்ளாமல் நமதூர் தவ்ஹீது ஜமாத் சகோதரர்கள் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று தெரிவித்தால் இன்ஷா அல்லாஹ் அவ்விசயத்தில் இயன்ற பங்களிப்பைச் செய்யலாம். மற்றவாசகர்களும் இவ்விடயத்தில் சீரியசான கருத்துக்களைப் பதிவு செய்யும்படி அன்புடன் கோருகிறேன்.
0 comments:
Post a Comment