Nov 12, 2010

// // Leave a Comment

முதலைக்கு பலம் தண்ணீரிலே; பிஜெக்கு பலம் மக்கள் மறதியிலே!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
நந்தவனத்தில் ஒரு ஆண்டி; அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி; கொண்டுவந்தானொரு தோண்டி; அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி! என்ற இந்த பாடலை பிஜெ பல மேடைகளில் கூறியதுண்டு. இவரும் அதற்கேற்றார்போல் பல அமைப்புகளை உடைத்தார். அதில் அவர் இறுதியாக உடைத்தது தமுமுகவாகும்.

இந்த தமுமுகவிலிருந்து வெளியேறினோம் என்று சில நேரங்களும், வெளியேற்றப் பட்டோம் என்று சில நேரங்களும் பிஜெ அவரை பின்பற்றுபவர்களும் கூறுவதுண்டு. மேலும், தமுமுகவிலிருந்து பிரிந்ததற்கு அன்று தொட்டு சமீப காலம் வரை அண்ணன் சொன்ன ஒரே காரணம், 'தமுமுகவின் வளர்ச்சிக்கு தவ்ஹீத் பிரச்சாரம் தடையாக இருப்பதாக கூறினார்கள்' எனவே கொள்கைதான் முக்கியம் என்று தமுமுகவை விட்டு வெளியேறினோம் என்பதுதான்.

ஆனால் இப்போது மேற்கண்ட கூற்றிலிருந்து அந்தர் பல்டியடித்து இந்தியா டுடே பேட்டியில் பிஜெ கூறியிருப்பதை பாருங்கள்.

கேள்வி: தமுமுகவிலிருந்து என் பிரிந்தீர்கள்?

பதில்: அதன் நிறுவனர்களுள் நானும் ஒருவன். அவர்கள் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். நான் மார்க்கப் பாதையை தேர்ந்தெடுத்தேன். அதனால் தனித்தனி பாதைகள் தவிர்க்க முடியாததாகின.

அதாவது தமுமுக அரசியல் பாதையை தேர்ந்தெடுத்ததுதான் தனது விலகலுக்கு காரணம் என்று பிஜெ இங்கே கூறுகிறார். இதுதான் உண்மையெனில், இவ்வளவு காலமாக இந்த கருத்தை பிரிவுக்கு காரணமாக சொல்லாதது என்? மேலும் இதுதான் உண்மையெனில் கொள்கைக்காக பிரிந்தேன் என்று சொன்னது பொய்யல்லவா?

அடுத்து தமுமுக அரசியல் பாதையை தேர்ந்தெடுத்ததுதான் தனது தனிப்பாதைக்கு காரணம் என்று அண்ணன் கூறுவது எந்த அளவுக்கு அப்பட்டமான பொய் பாருங்கள். தமுமுக இவர் பிரிந்த 2004 ஆண்டில் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்ததா? இல்லையே! கடந்த 2008 நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதானே மமக மூலம் அரசியல் பாதை கண்டது. மக்களே இவரின் புரட்டை புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து, தமுமுகவின் அரசியல் பாதை காரணமாக பிரிந்ததாக கூறும் இவர், இவரது பாதையான மார்க்கத்தில் மட்டும் பயணித்து, அந்த அரசியல் பாதை பக்கம் தலைவைத்து படுக்காமல் இருந்திருந்தாலாவது இவர் கொஞ்சம் உண்மையாளர் என்று நம்பலாம். ஆனால், செய்தது என்ன?

ராமதாஸே மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு, ஒரு தேர்தலில் போயஸ்தோட்டத்தில் காற்று வாங்கினார். மறு தேர்தலில் கோபாலபுரத்தில் குலாவினார். மேலும் எக்கட்சியுடன் குலாவுகிறாரோ அக்கட்சியின் தேர்தல் நேர பிரச்சார பீரங்கியாக மாறினார். தொடர் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிடாத அரசியல்வாதியாக தன்னை அடையாளம் காட்டினார்.

மேலும், ' தேர்தல் களப்பணி ஆற்றினால் ஈமான் போய்விடும்' என்று தீட்டிய தலையங்கத்தை தலையை சுற்றி வீசிவிட்டு, தன்னை பின்பற்றுபவர்களை போஸ்டர் ஒட்டுதல், பிரசுரம் விநியோகித்தல், வீடுவீடாக வாக்கு சேகரித்தல் என களப்பணி ஆற்றிட செய்தார்.

தனது இயக்கத்தை தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சியைப் போல் வழி நடத்தினார். அண்ணே! என்ன இது கூத்து என்று யாரேனும் கேட்டால், எல்லாம் சமுதாய நண்மைக்கே[!] என சளைக்காமல் சரடுவிட்டார். ஆனால் சமுதாயத்தை சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க, 'களம் இறங்கி போராடி' தனது சமுதாய பற்றை காட்டினார். இதுபோல் அண்ணனின் அறிவிக்கபடாத அரசியல் அந்தரங்கங்கள் ஆயிரம் உண்டு. அவை அவசியப்படும் நேரத்தில் அலசப்படும் இன்ஷா அல்லாஹ். இதை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், அவரின் தடுமாற்றத்தை மக்கள் உணர்ந்து கொள்ளவே.

இப்போது மீண்டும் தலைப்பை படியுங்கள். ஆனாலும் பிஜெ, 'உண்மையை மட்டும் சொல்பவர்'[?] என்று நம்புவோமாக!

-அப்துல் முஹைமீன்.

0 comments: